திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள், சொத்து வரி, வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகையை எளிதில் செலுத்தும் வகையில், மாநகராட்சி பிரதான அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரலில் இருந்து செப்., வரை முதல் தவணை, அக்., இருந்து மார்ச் வரை இரண்டாவது தவணையாக வரி செலுத்த வேண்டும். தற்போது இரண்டாவது தவணை காலம் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், பல கோடி ரூபாய் வரியினங்கள் வசூலிக்கப்படாமல் உள்ளது.
சொத்து வரி சுமார் 8 கோடி ரூபாய், தொழில் வரி ஒரு கோடி, குடிநீர் கட்டணம் 5 கோடி, கடை வாடகை மற்ற வரி இனங்கள் இரண்டு கோடி ரூபாய் என மொத்தம் சுமார் 16 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி நிதியாண்டு முடியும் தருவாயில் உள்ளது. பல்வேறு வரியினங்கள் பட்டியலில், இன்னும் சுமார் 16 கோடி ரூபாய் வசூலாகாமல் உள்ளது. வரியினங்களை செலுத்த வசதியாக, மாநகராட்சி அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் எட்டு ஊராட்சி அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்கள் ஏழு நாட்களும் செயல்படும்.
பொதுமக்கள் உடனடியாக வரியினங்களை செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,‘‘ என்றார்.
இந்நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் வரி ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வரி செலுத்தும் போது கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.