தினமணி 12.11.2009
திருப்பூர் மாநகரில் புதிய சாலை அமைப்பு
திருப்பூர், நவ.12: திருப்பூரில் மாநகரின் பிரதான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க புதிய சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக திட்டமிடப்பட்ட வழியிலுள்ள கட்டடங்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
மாவட்டம், மாநகராட்சி நிர்வாகங்கள் மூலம் திருப்பூர் மாநகரை அழகுபடுத்த 16 அம்ச திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில் மாநகர சாலைகளில் ஏற்படும் நெருக்கடியை குறைக்க புதிய சாலைகள் அமைத்தல் முக்கிய திட்டமாக உள்ளது.
முதற்கட்டமாக திருப்பூர்–ஊத்துக்குளி சாலையிலும், ரயில்வே மேம்பாலத்திலும் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதுராமகிருஷ்ணாபுரம் இரட்டைக்கண் பாலம் முதல் சிட்கோ தொழிற்பேட்டை சாலையை இணைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுவரை புதுராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் புஷ்பா தியேட்டர் பகுதிக்கு செல்ல ரயில் பாதையை கடந்து ஊத்துக்குளி சாலை, ரயில்வே மேம்பாலம் வழியாக புஷ்பா தியேட்டர் ரவுண்டா சென்றடைந்தன
புதியதாக அமைக்கப்படும் சாலையின் மூலம் புது ராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து நேரடியாக தொழிற்பேட்டை வழியே புஷ்பா தியேட்டர் ரவுண்டானாவை அடைய முடியும். அதற்காக தற்போது சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்த 2 பெரிய அலுவலக கட்டங்களும், 4 வீடுகளும் வியாழக்கிழமை இடிக்கப்பட்டன.
“கட்டடங்கள் இடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் 40 அடி அகலத்தில் சுமார் 1 கி.மீ.க்கு சாலை அமைக்கப்படும்.
இதனால் ஊத்துக்குளி சாலை, குமரன் சாலை, மேம்பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும்.
இதேபோல் மின்மயானம் சாலையிலிருந்து அணைப்பாளையம், பாளையக்காடு, மண்ணரை வழியே ஊத்துக்குளி சாலையை அடையும்படி புதிய சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது‘ என்றார் மேயர் க.செல்வராஜ்.