தினகரன் 28.06.2010
திருவள்ளுவர் மைதானத்தில் விரைவில் நடை பயிற்சி மேடை நகராட்சி தலைவி தகவல்
கரூர், ஜூன் 28: கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் விரைவில் நடைப்பயிற்சி மேடை அமைக்கப்பட உள்ளதாக கரூர் நகராட்சி தலைவி சிவகாமசுந்தரி கூறினார்.
கரூர் நகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர் விளையாட்டு மைதானத் தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன்மூலம் ஏராள மான வீரர்&வீராங்கனைகள் மாவட்டம் மற்றும் மாநில, தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள். காலை, மாலை என இரு வேளைகளிலும் பொதுமக்களால் நடைபயிற்சி தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் விளையாட்டு மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சமான பொருட்காட்சி, சர்க்கஸ், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கரூர் நகராட்சி தரை வாட கைக்கு விட்டு வருகிறது.
இந்த விளையாட்டு மைதானத்தின் கிழக்கு பக்க நகராட்சி வார்டு அலுவலகம் அருகிலுள்ள வாயில் வழியாக நுழைவதிலிருந்து மைதானத்தின் வடபுறம் உள்ள ஒரு பழைய கட்டடத்தையும், அதனைச்சார்ந்த பகுதியில் சிலர் கழிவறையாக பயன்படுத்தி வருகிறார்கள். இரவு நேரங்களில் சிலர் சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த இடத்தில் சுகாதாரமற்ற நிலைமையை போக்கவும், சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதை தடுக்கும் வகையிலும், அந்த இடத்தை பொதுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி அப்பகுதியை விளையாட்டுத் திடலுடன் இணைந்த நடைப்பயிற்சி மைதானமாக அமைக்கப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி தலைவி சிவகாமசுந்தரி கூறுகையில், மைதானத்தில், 500அடி நீளம், 25அடி அகலம் கொண்ட வாக்கிங் பிளாட்பார்ம், முதியோர்களும், பெண்களும் நடைப்பயிற்சிக்கு பயன்படும் வகையில் நடைமேடை அமைக்கப்பட உள்ளது. நன்கொடையாளர்கள் அல்லது அரசு நமக்குநாமே திட்டம் மூலமாக பணி செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தேசித்திருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் துவங் கும் என்றார்.