தினமணி 18.08.2009
திருவாரூர் நகரை தூய்மையாக்க நடவடிக்கை
தினமணி 18.08.2009
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பூங்காவில் தூய்மைப் பணியை திங்கள்கிழமை தொடக்கி வைத்த பின்னர் (படம்) ஆட்சியர் கூறியது:
திருவாரூர் நகரை தூய்மை நகராக்கவும், பாலிதீன் பயன்படுத்தாத நகராக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென பல்வேறு சேவை அமைப்புகள், நகர மேம்பாட்டுக் குழு, பிற தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவைகளைப் பயன்படுத்தி இப்பணியை மக்களிடம் கொண்டு செல்லவும், மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியே சேகரிக்க மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தை கட்டுப்படுத்தவும், படிப்படியாக முற்றிலுமாக அதன் உபயோகத்தை நிறுத்தவும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியில் ஈடுபடுவோருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
இப்பணியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்லூரி மாணவர்கள், தி மெரிட் பள்ளி மாணவர்கள், மக்கள் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தோர், நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், ஆட்சியர் அலுவலக துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ. ஜான்லூயிஸ், நுகர்வோர் குழுத் தலைவர் பிறை. அறிவழகன், செயலர் வி.கே.எஸ். அருள், மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் சொ. குபேந்திரன், திருவாரூர் – விஜயபுரம் வர்த்தகர் சங்க துணைத் தலைவர் வி.கே.கே. ராமமூர்த்தி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.