தினமணி 04.09.2010
திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது
திருச்சி, செப். 3: திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மான நகல் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையாவிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கான தீர்மானம் அண்மையில் மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவெறும்பூர் பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என புதன்கிழமை திருவெறும்பூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மான நகலை மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையாவிடம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் வியாழக்கிழமை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“திருவெறும்பூர் பேரூராட்சி என்பது சட்டப்பேரவைத் தொகுதி, வட்ட மற்றும் ஒன்றியத்தின் தலைமையிடமாக உள்ள நகரம். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள புகழ்பெற்ற திருவெறும்பீசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ளது.
எனவே, இந்தப் பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதால் இதன் தனித்தன்மை மற்றும் நகரின் சிறப்புத் தன்மை பாதிக்கப்படும். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் சேர்ந்து போராடி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் திருவெறும்பூரில் கிடைக்கப்பெற்றுள்ளோம்.
தற்போது பேரூராட்சியாக இருப்பதால், சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்வது எளிதாக இருக்கிறது. பிறப்பு– இறப்புச் சான்று பெறுவது, கட்டட அனுமதி பெறுவது, குடிநீர் இணைப்புகள் பெறுவது உள்ளிட்ட அனைத்து மக்கள் நலப் பணிகளும் 3 முதல் 7 நாள்களுக்குள் செய்துத் தரப்படுகிறது.
ஆனால், இந்தப் பேரூராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் உரிய அலுவலர்களைத் தேடிச் செல்வது முதல் அனுமதி பெறுவது வரை பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதுடன் காலதாமதமும் ஏற்படும். எனவே, மாநகராட்சியுடன் இணைக்காமல், திருவெறும்பூர் பேரூராட்சியின் தனித்தன்மை பாதிக்காத வகையில் சிறப்பு நிலை பேரூராட்சியாகவோ, நகராட்சியாகவோ தரம் உயர்த்த வேண்டும்‘ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவில், நகர திமுக செயலர் சோம. அரங்கராசன், பேரூராட்சித் தலைவர் க. பன்னீர்செல்வம், அதிமுக நகரச் செயலர் எஸ். பாஸ்கர், காங்கிரஸ் நகரத் தலைவர் மலர்மூர்த்தி, மதிமுக நகரச் செயலர் ஏ. துரைராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் கே.சி. பாண்டியன், தேமுதிக நகரச் செயலர் டி.டி. கார்த்திகேயன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எஸ். சந்திரகுமார், பாமக நகரத் தலைவர் கே. குமார் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.