திறந்தவெளி கழிப்பிடங்களைத் தடுக்க ஆலோசனை
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 2015-க்குள் திறந்தவெளி கழிப்பிடங்களை முழுமையாகத் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 1000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் ஆணையர் வே.ப. தண்டபாணி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது:
மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்களில் இருந்தும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். பின்தங்கிய பகுதிகளில் அறியாமையால் மக்கள் திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிக்கும் நிலை இருக்கிறது.
இதைத் தடுக்க ஏற்கெனவே பெண்கள் மற்றும் ஆண்கள் குழுக்களை ஒருங்கிணைத்து சமுதாய வளர்ச்சி சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்தங்கிய பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வரின் அறிவிப்பின்படி வரும் 2015-க்குள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க மகளிர் குழுக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்றார் தண்டபாணி.
கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், நகர்நல அலுவலர் (பொ) ந. ராஜேசுவரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.