தினமலர் 21.09.2010
திறப்பு விழா
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் 2 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அண்ணாதுரை நூற்றாண்டு விழா நினைவு வளைவு திறப்பு விழா நடந்தது.கலெக்டர் அமுதா தலைமை வகித்து, நுழைவு வாயிலை திறந்த வைத்து பேசுகையில்,”” பழைய தர்மபுரியில் இருந்து அரசு மருத்துவமனை வரையில் 6 கோடி ரூபாயில் சாலை அகலப்படுத்தப்பட்டு தடுப்பு சுவருடன் கூடிய சென்னை அண்ணா சாலை போல அமைக்கப்டவுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் இரண்டாம் கட்டமாக அரசு மருத்துவமனை முதல் அதியமான்கோட்டை வரை சாலை அகல்படுத்தப்படும். இப்பணி ஒரு வாரத்தில் துவங்கப்படும். 50 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. நகரில் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் செப்பனிடப்படும். நகராட்சியை சுற்றியுள்ள பஞ்சாயத்து பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது‘ என்றார்.நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா, கமிஷனர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.