தில்லி இரவுக் குடில்களின் கழிப்பறை விவரம்:அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
தில்லியில் உள்ள இரவு நேரக் குடில்களுக்கான கழிப்பறைகளின் விவரங்கள் குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு தில்லி பிரதேச அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள இரவு நேரக் குடில்களுக்குப் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறி “ஷரி அதிகார் மஞ்ச் பகரோங்கே லியே’ எனும் தன்னார் தொண்டு நிறுவனம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், “தில்லியில் வீடில்லாத மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இரவுநேரக் குடில்களுக்கான நடமாடும் கழிப்பறைகள் பலவும் செயல்படவில்லை. இதனால், இரவுக் குடில்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று, போதைக்கு அடிமையானோருக்கான சிகிச்சை மையங்கள் எண்ணிக்கை விஷயத்திலும் தவறான தகவல்களை தில்லி அரசு அளித்துள்ளது. 32 போதை சிகிச்சை மையங்களில் போதை மருந்து சிகிச்சைக்கான தேசிய மையம் (எய்ம்ஸ்), போதை சிகிச்சை மருந்தகம் (ஜிபி பந்த் மருத்துவமனை), தில்ஷாத் ஹார்டனில் உள்ள ஐ.எச்.பி.ஏ.எஸ். ஆகியவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. போதை சிகிச்சை மையங்கள் என்ற பெயரில் பல இருந்தாலும் அவற்றில் அதற்கான உரிய வசதிகள் ஏதும் இல்லை’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்திய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ். எண்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு:
தில்லியில் உள்ள இரவுநேரக் குடில்களுக்காக நிரந்தர, தாற்காலிக கழிப்பறைகள் எத்தனை உள்ளன. அவற்றில் எத்தனை சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவர அறிக்கையை தில்லி நகர்ப்புற குடிசை மாற்று வாரியம் (டியுஎஸ்ஐபி) வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதேபோன்று, அனைத்து போதை சிகிச்சை மையங்களும் செயல்படுவதை உறுதிப்படுத்த தில்லி மாநில சட்டப் பணிகள் ஆணையம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.