தினமலர் 04.02.2010
தி.நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: மேயர் உறுதி
தி.நகர் : “”தி.நகரில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும்,” என, மேயர் சுப்ரமணியன் பேசினார். சென்னை 122வது வார்டுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு, இலவச கலர் “டிவி‘ வழங்கும் விழா, அசோக் நகர் மூன்றாவது அவென்யூவில் நேற்று நடந்தது. மேயர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: சென்னையில் இதுவரை ஐந்து லட்சத்து 40 ஆயிரம் கலர் “டிவி‘கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் தி.நகரில், ஆறாயிரத்து 991 “டிவி‘க்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த தொகுதியில் மொத்தம் 55 ஆயிரத்து 67 “டிவி‘கள் வழங்கப்பட்டுள்ளன. தி.நகரில் இரு பூங்காப் பணி, இரண்டு கோடியே 55 லட்ச ரூபாய் செலவிலும், வடபழனியில் 24 மணி நேர மருத்துவமனை ஒரு கோடி 25 லட்ச ரூபாயிலும், 74 தார்ச்சாலைப் பணிகள் ஐந்து கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தாண்டு மட்டும் இங்கு 32 கோடியே 12 லட்ச ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த இரு தினங்களுக்கு முன், தி.நகரில் ஆக்கிரமிப்பு செய்திருந்த, 15 சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து இப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.