தினமலர் 26.04.2010
தி.மலைக்கு வந்தாச்சு ‘பயர் யூனிட்‘
திருவண்ணாமலை: தி.மலை நகரில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே செல்லும் வகையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ‘பயர் யூனிட்‘ செயல்பட தொடங்கியது.திருவண்ணாமலை பஸ்நிலையம் அருகே நகராட்சி இடத்தில் 1948ம் ஆண்டு முதல் தீயணைப்பு நிலையம் இயங்கி வந்தது. இந்த இடத்தில் நகராட்சி சார்பில் வாகன காப்பகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதற்கு பதிலாக, நகராட்சி சார்பில் மாற்று இடம் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நகரை விட்டு 6 கி.மீ., தூரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்த தீயணைப்பு நிலையம் செயல்பட தொடங்கியது. இதனால், நகரில் தீ விபத்து ஏற்பட்டால், போக்குவரத்து நெரிசல் காரணமாக தீயணைப்பு வாகனம் தாமதமாக வரும் நிலை காணப்பட்டது. இது வியாபாரிகள், பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சி சார்பில் குடிநீர் லாரியில் முதற்கட்ட தீ தடுப்பு பணிகளுக்காக சாதனங்கள் பொருத்தப்பட்டன. நகரில் தீ விபத்து ஏற்பட்டால் நகராட்சி அலுவலகத்துக்கு உடனே தகவல் தெரிவித்தால் முதற்கட்ட தீ தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தி.மலை நகரிலேயே ‘பயர் யூனிட்‘ ஒன்று செயல்பட இடம் தேர்வு செய்யுமாறு கலெக்டர் ராஜேந்திரன் தீயணைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், தி.மலை தாசில்தார் அலுவலக வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த அலுவலகம் எதிர்புறம் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தண்ணீர் நிரப்புவதற்கு தேவையான வசதியும் அங்கு உள்ளது. எனவே, ஆர்.டி.ஓ. அலுவலத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டு ‘பயர் யூனிட்‘ செயல்பட தொடங்கியது. இனிமேல், நகரின் உட்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனம் விரைந்து செல்லக்கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது.