தினகரன் 15.11.2010
துணை கமிஷனர்கள் உட்பட மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் சீருடை
மும்பை, நவ.15: துணை மாநகராட்சி கமிஷனர்கள் உட்பட மும்பை மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் சீருடை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட வேண்டும் என்று நிலைக்குழுவின் தலைவர் ராகுல் ஷெவாலே யோசனை தெரிவித்து இருந்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மேயர் அறையில் நடந்தது. மாநகராட்சியின் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த குழு தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி கமிஷனர் ஸ்வாதீன் ஷத்திரியா, கூடுதல் மாநகராட்சி கமிஷனர் ஏ.கே.சிங் மற்றும் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக இந்த திட்டத்தை மிகவும் வரவேற்ற மாநகராட்சி கமிஷனர் ஷத்திரியா, “இது ஒரு நல்ல யோசனை மாநகராட்சி நிர்வாகம் இதை தீவிரமாக பரிசீலிக்கும். இந்த திட்டத்தை அமல் படுத்துவதற்கு ஆகும் செலவு மற்றும் இதை படிப்படியாக அமல் படுத்தலாமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்Ó என்றார்.
இத்திட்டம் குறித்து ஷெவாலே கூறுகையில், “சீருடை அணிவதால் ஊழியர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்களாகவே தங்களது கடமை மற்றும் பொறுப்புகளை உணரத்தொடங்குவார்கள். வார்டு அலுவலகங்களில் மட்டுமின்றி மாநகராட்சி தலைமை அலுவலகத்திலும் மாநகராட்சி ஊழியர்களை அடையாளம் காண இந்த சீருடை உதவும்Ó என்றார்.
மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள் சீருடை அணியும்போது மாநகராட்சி ஊழியர்கள் ஏன் அணியக் கூடாது? என்றும் அவர் கேட்டார். சீருடை அணிவதற்கு மாநகராட்சி பொறியாளர்கள் யூனியன் ஏற்கனவே விருப்பம் தெரிவித் துள்ளதாகவும் அவர் கூறினார்.
மும்பை மாநகராட்சியில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 60 சதவீதம் ஊழியர்கள் பியூன் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள். அவர்களுக்கு ஏற்கனவே சீருடை கொடுக்கப்பட்டுள்ளது. குமாஸ்தாக்கள் முதல் துணை மாநகராட்சி கமிஷனர் வரையில் உள்ள மீதமுள்ள 40 சதவீதம் ஊழியர்களுக்கும் இனி சீருடை வழங்கப்பட உள்ளது.