தினமணி 30.08.2010
துணை முதல்வர் திறந்து வைத்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்
தென்காசி,ஆக.29: தமிழக துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட செங்கோட்டை நகராட்சி பூங்காவில் திறந்து சில தினங்களிலேயே பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
செங்கோட்டை நகராட்சி அருகே முத்துசாமி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை மேம்படுத்துவதற்காக தமிழக அரசின் சுற்றுலா நிதியிலிருந்து |ரூ 19.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியிலிருந்து பூங்காவில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், வனவிலங்கு சிலைகள், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, அமர்ந்து பொழுதுபோக்கும் வகையில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள், இருகுடில்கள், புல்வெளிகள் அமைக்கப்பட்டன. இந்த பூங்காவில் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் 6-ம் தேதியன்று தமிழக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் கடையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பூங்காவை திறந்து வைத்தார்.
அது முதல் இப்பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்துவைக்கப்பட்டு வருகிறது. ஆனால் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து சில நாள்களிலேயே அங்கு அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஊஞ்சல்கள் சேதமடைந்து, அகற்றபட்டுவிட்டன.
அதேபோல், வாத்துகளின் சிலைகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. பூங்காவின் சுற்றுச்சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில்களில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் ஆங்காங்கே சேதமடைந்தும் காணப்படுகிறது.
பூங்கா திறந்து சில தினங்களிலேயே பல்வேறு குறைபாடுகளால் காணப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பணிகளின் தரம் குறைவு காரணமாக பூங்கா திறக்கப்பட்டு சில தினங்களிலேயே உபகரணங்கள் முழுவதும் சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அந்த பூங்காவில் நடந்து முடிந்துள்ள பணிகளை முழுமையாக ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்தவற்றை சீரமைக்க வேண்டும். மேலும் பூங்காவைப் பராமரிக்க ஒரு நபரை நியமித்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.