தினமலர் 03.05.2010
துப்புரவாளர்களுக்கு இலவச மருத்துவம்: சேலம் மாநகராட்சி கமிஷனர் உறுதி
சேலம்: ”சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்போடு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்,” என்று மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி உறுதியளித்தார். கடந்த இரண்டு ஆண்டாக மே 2 ம் தேதி, சேலம் மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர் தின விழா கொண்டாடப்படுகிறது. நேற்று நடந்த துப்புரவு பணியாளர் தின விழாவில், மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி பேசும்போது, ” சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மகத்தான பணி செய்கின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. துப்புரவு பணியாளர்கள் எந்த நேரத்திலும், கோரிக்கைகளை நேரடியாக மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து கூறலாம். துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான துப்புரவு பணியாளர்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை. அவர்களுடைய நலனுக்காக, ஆண்டுதோறும் தனியார் மருத்துவமனைகளின் உதவியோடு இலவச மருத்துவ முகாம் நடத்தி அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கு துப்புரவு பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். துப்புரவு பணியாளர்களின் வாரிசு வேலை கோரிக்கையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
சேலம் மாநகராட்சி மேயர் ரேகாபிரியதர்ஷினி பேசும்போது, ” சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பிரச்னைகளை நேரடியாக என்னிடம் தெரிவிக்கலாம். பெண் துப்புரவு பணியாளர்கள் பாலிஸ்டர் சேலை அணிந்து வேலை செய்ய சிரமமமாக இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு பாலிகாட்டன் சேலைகள் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இனிமேல், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,” என்றார். நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி துணை மேயர் பன்னீர்செல்வம், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் தங்கவேல், நெப்போலியன், மாநகர நல அலுவலர் பொற்கொடி, மண்டல குழு தலைவர்கள் அசோகன், மோகன், சுகாதார நிலைக்குழு தலைவர் தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், துப்புரவு பணியாளர்கள் பெருமாள், மணி, சுப்ரமணியம், செல்வம், ராஜேந்திரன், குப்புசாமி, வி.பெருமாள், ராமசாமி, மோகனாம்பாள், முனுசாமி, வீரன், பழனிசாமி ஆகிய 12 பேருக்கு தலா ரூ.ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மெத்தனம் காட்டும் துப்புரவு பணியாளர்:சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. பல இடங்களில் அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுகிறது. சமீபத்தில், சேலம் ஃபேர்லாண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டதால், வேறு வழியின்றி ஃபேர்லாண்ட்ஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸாரே சாக்கடையை தூர்வாரினர். துப்புரவு பணியாளர்களின் மெத்தனத்தால், லத்தியுடன் நிற்க வேண்டிய போலீஸார் தூர்வாரும் குச்சியுடன் நின்றனர்.