துப்புரவுப் பணியில் சுய உதவிக்குழுவினரை நியமிக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் இடங்களில் சுயஉதவிக் குழுவினரை நியமனம் செய்ய வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு மன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பேரூராட்சியில் சுய உதவிக்குழு மூலம் 35 நபர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். தற்போது புதிதாக துப்புரவுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பேரூராட்சியின் நிர்வாக செலவை குறைக்கும் வகையில், துப்புரவுப் பணியாளர் தேர்வை ரத்து செய்துவிட்டு இப்பணியில் சுய உதவிக் குழுவினரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் பேரூராட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.