தினமலர் 02.08.2010
துப்புரவு தொழிலாளரை நிரந்தரமாக்க நகராட்சி பரிந்துரையை அரசு ஏற்குமா?
திருப்பூர்:நகராட்சிகளில் தற்காலிகமாக பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய, தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகங்கள் பரிந்துரைத்துள்ளன. இவ்விஷயத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் சுகாதார பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.திருப்பூர் மாநகராட்சியோடு இணைய உள்ள நல்லூர் நகராட்சியில் 15 வார்டுகளிலும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. சுகாதார துறையில் 150 நபர் வரை பணிபுரிய வேண்டிய இடத்தில், 11 பேர் மட்டும் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க 101 ரூபாய் ஊதியத்தில் 52 சுய உதவி குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐந்தாண்டுக்கும் மேலாக இவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. நகராட்சி சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.போதிய ஆட்கள் இல்லாததால், சுகாதார பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. காலை 6.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு கையுறை, தலைகவசம், பாதுகாப்பு காலணி உள்ளிட்டவைகளை நகராட்சி கொடுப்பதில்லை.
சிக்கலை தீர்க்க தற்காலிக சுகாதார பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதும் அவசியம். சுய உதவி குழுக்களாக பணியாற்றுபவர்களுக்கும் பாதுகாப்பு அணிகலன்களை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறுகையில், “”தமிழகத்தில் உள்ள மற்ற நகராட்சிகளிலும் இதே பிரச்னை நீடிக்கிறது. இதுபற்றி அரசே இறுதி முடிவெடுக்க வேண்டும். பணியாளர் களை நிரந்தரம் செய்யவும், ஊதிய உயர்வு குறித்து அரசுக்கு மனு அனுப்பப் பட்டுள்ளது. “”தேவையான ஆட் களை நியமிக்க, சுயஉதவி குழுவினரை அதிகப்படுத்தும் பணி நடக்கிறது. அரசாணை கிடைத்ததும், அனைத்து பணியாளர்களும் நிரந்தரம் செய்யப்படுவர் மற்றும் ஊதிய உயர்வு பணி மேற்கொள்ளப்படும்,” என்றார்.