தினகரன் 22.06.2010
துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
சேலம், ஜூன் 22: சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க, மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று நடந்த இயல்புக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம், மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மேயர் ரேகா பிரியதர்ஷினி தலைமை வகித்தார். ஆணையர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பாமக உறுப்பினர் தனசேகரன் பேசுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் 21 கோட்டங்களில் துப்புரவு பணிகள் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால், குப்பைகளை அகற்றும் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
இப்பணிகளை மீண்டும் தனியாருக்கு ஒப்பந்தம் விடாமல், மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும். அல்லது, மண்டல அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் விட வேண்டும். கொசு மருந்து பல்வேறு இடங்களில் முறையாக அடிப்பதில்லை. கொசு மருந்து சரியான விகிதத்தில் கலந்து அடிக்காததால் கொசுக்களை ஒழிப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.
காங்., உறுப்பினர் தர்மலிங்கம் கூறும்போது, ‘‘துப்புரவு பணிகளை தனியாருக்கு விடப்படும் ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். சேலம் மாநகராட்சி, நகராட்சியாக இருந்தபோது 1800 துப்புரவு தொழிலாளர்கள் இருந்தனர். பணி ஓய்வு, மரணம் காரணமாக இப்போது 500 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களை புதிதாக நியமிக்க வேண்டும்,’’ என்றார்.
மாநகராட்சியில் போதுமான அளவுக்கு சுகாதார ஆய்வாளர்கள் இல்லை. ஆய்வாளர் பற்றாக்குறையால், ஒருவரே 5 கோட்டங்களின் பணிகளை கவனிக்கும் அவலம் உள்ளதாக இ.கம்யூ., உறுப்பினர் ரமணி கூறினார்.
கழிவு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உறுப்பினர் அருள் (பாமக), 22வது கோட்டம் இந்திரா நகர் மக்களுக்கு சாக்கடை கால்வாய், பொது கழிப்பிட வசதிகளைச் செய்து தருமாறு உறுப்பினர் கலைச்செல்வி (பாமக) ஆகியோரும் கூறினர்.
மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஆணையர் பழனிசாமி ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில், ‘‘துப்புரவு பணிகளை 3ல் ஒரு பங்கை, தனியாருக்கு விட வேண்டும் என்று மூன்று ஆண்டுக்கு முன் அரசு கொள்கை முடிவாக அறிவித்தது. அதன்படிதான், சேலத்தில் 21 கோட்டங்களின் துப்புரவு பணிகள் தனியாருக்கு விடப்பட்டது. மாநகராட்சியே இப்பணிகளை செய்வதால் கூடுதல் செலவாகிறது. இருப்பினும் அனைத்து உறுப்பினர்களிடமும் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டு, இறுதி முடிவெடுக்கப்படும். அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர். இதையடுத்து, துப்புரவு பணிகளை தனியாருக்கு விடுவது குறித்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மாமன்ற ஆளுங்கட்சித்தலைவர் நடேசன் அறிவித்தார்.
அதிமுக புறக்கணிப்பு
உயர்நீதிமன்றத்தில் தமிழை, வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி அதிமுகவினர் நேற்று சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அதிமுக உறுப்பினர்கள் யாரும் நேற்று நடந்த மாமன்ற இயல்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சிலர், தங்களது கோட்டம் தொடர்பான அவசர தீர்மான அறிக்கையை ஆளுங்கட்சித் தலைவரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டனர்.
செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு
கடந்த மாதம் நடந்த இயல்புக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மாநகராட்சி பணிகள் மந்தமாக நடப்பதாக குற்றம் சாட்டினர். இந்நிலையில் நேற்று அதிமுக உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால், நேற்று 30 நிமிடங்களில் இயல்புக் கூட்டம் முடிந்தது. கூட்டம், காலை 11.20க்கு தொடங்கி, 11.50¢க்கு முடிந்தது.
இதையடுத்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்குமாறு மேயர் ரேகா பிரியதர்ஷினி அழைப்பு விடுத்தார். அத்துடன் கூட்டம் கலைந்தது.