தினமணி 02.08.2010
துப்புரவு பணியாளரிடம் உழைப்புச்சுரண்டல்
திருப்பூர், ஆக. 1: திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவரும் சுயஉதவிக் குழு பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 100 மட்டுமே சம்பளம் வழங்கி, உழைப்புச் சுரண்டல் செய்யப்படுவதாக ஏஐடியூசி குற்றம்சாட்டியுள்ளது.
÷தற்போது திருப்பூர் மாநகராட்சியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுவரும் துப்புரவுத் தொழிலாளர்கள் சுமார் 40 ஆண்டுகளாக அப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நகரின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மனிதக்கழிவுகளை அகற்றுதல், சாக்கடை கால்வாய்களில் இறங்கி தூர்வாருதல், தெருக்கள் தூய்மை உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
÷தென்னம்பாளையம், தாராபுரம் சாலை மற்றும் சூசையாபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள டிஎம்சி காலனிகளில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர் குடும்பங்கள் 2 தலைமுறை க்கு மேலாக நகராட்சி தூய்மைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
÷தற்போது அக் குடும்பங்களில் தலா 3 அல்லது 4 பேர் வேலையின்றி இருப்பதுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துப்புரவுப் பணிக்காக பெயர்களை பதிவு செய்து பணிக்காக காத்துக் கொண்டுள்ளனர்.
÷ஆனால், அத்தொழிலாளர்களுக்கு முறையான பணியாணை வழங்காமல் சுய உதவிக் குழுக்கள் மூலம் அதே தொழிலாளர்களை துப்புரவு பணிக்கு எடுத்து ரூ. 100 கூலி கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
÷இதுகுறித்து, மாமன்ற உறுப்பினரும், ஏஐடியூசி பொதுச்செயலருமான பி.ஆர்.நடராஜன் கூறியது: மாநகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாகப் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 400 வழங்கப்படுகிறது. ஆனால், சுயஉதவிக் குழு மூலம் அதே வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ. 100 மட்டுமே தினக்கூலி வழங்கப்படுகிறது. இது ஒருவகையில் உழைப்புச்சுரண்டல் ஆகும்.
÷திருப்பூர் மாநகராட்சியில் சுயஉதவிக் குழு மூலம் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்குவது போல நாளொன்றுக்கு ரூ. 400 சம்பளம் வழங்க வேண்டும். மேலும், துப்புரவுப் பணியாளர்கள் தற்போது குடியிருந்து வரும் வீடுகள் சுகாதாரமற்ற முறையில், பராமரிப்பின்றியும் உள்ளதைச் சீரமைத்து சுகாதாரமான குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
÷2011ம் ஆண்டில் 2 நகராட்சிகள், 8 ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ள நிலையில், திருப்பூர் மாநகராட்சியின் சுகாதாரத்தைப் பாதுகாக்க சுகாதாரப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும், என்றார்.
÷இதுகுறித்து, திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகைதரும் துணைமுதல்வர் மு.க.ஸ் டாலினிடம், மாவட்ட சுகாதார தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) சார்பில் கோரிக் கை விடுக்க உள்ளதாக, அவர் தெரிவித்தார்.