தினமலர் 21.07.2010
துப்புரவு பணியாளர் நியமிக்கஅரசுக்கு மாநகராட்சி கருத்து
திருப்பூர்: “பற்றாக்குறையாக உள்ள 669 துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்‘ என, திருப்பூர் மாநகராட்சி சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பை பிரச்னை பெரும் தலைவலியாக உள்ளது. மொத்தம் 27.20 சதுர கி.மீ., பரப்புள்ள மாநகராட்சியில், ஒரு லட்சத்து 7,729 குடியிருப்புகள் உள்ளன. தொழில் நகரம் என்பதால், இடப் பெயர்வு குடியேற்றங்களும், மக்கள் அடர்த்தியும் அதிகமாக உள்ளது. இதனால், குப்பை, கழிவுகளும் அதிகளவு உருவாகின்றன. தற்போது மாநகராட்சியில் 819 துப்புரவு பணியாளர்கள் பணியிடம் மட்டுமே அனுமதிக் கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,488 துப்புரவு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்; 669 பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளன.அப்பணியிடங்களை 4,000-10 ஆயிரம்–ஜிபி 1,300 ரூபாய் என்ற விகிதத்தில், காலமுறை ஊதியத்தில் நியமிக்கக்கோரி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்புரவு பணிகளை மேற்பார்வை செய்ய இரண்டு வார்டுகளுக்கு ஒரு “கன்சர்வன்சி‘ இன்ஸ்பெக்டர் வீதம் 26 பணியிடங்களை புதிதாக தோற்றுவிக்கவும், கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.