தினமணி 10.07.2013
தினமணி 10.07.2013
துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்
தமிழகத்தில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில்,
பொதுக் கழிப்பிடங்களைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் துப்புரவுப் பணி
மேற்பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்களுக்கு மேயர் செ.ம.வேலுசாமி ஸ்மார்ட்
போன்களை செவ்வாய்க்கிழமை வழங்கினார். ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:
பிற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக கோவை மாநகராட்சி மக்கள்நலத்
திட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுகிறது. மக்களின்
குறைகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு நிவர்த்தி செய்வதற்கு எஸ்.எம்.எஸ்.
வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை சிறந்த முறையில்
பராமரித்து, தரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய முறையை மாநகராட்சி
அறிமுகப்படுத்துகிறது. பொதுக் கழிப்பிடங்களின் சுத்தத்தை
உறுதிப்படுத்துவதற்காக மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவுப் பணி
மேற்பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
அலைபேசியில் பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள், துப்புரவு
ஆய்வாளர்கள், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்களின் ஸ்மார்ட் போன்களில்
பதிவேற்றம் செய்யப்படும். துப்புரவு மேற்பார்வையாளர்கள், பொதுக்
கழிப்பிடங்களில் தண்ணீர் விநியோகம், சுத்தம், மின்விநியோகம், கழிவறைகள்
மற்றும் குப்பைத் தொட்டிகள் தொடர்பாக ஏற்கனவே திட்டமிட்டபடி இரு
கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள்.அவர்கள் பொதுக் கழிப்பிடங்களை நேரடி ஆய்வு
செய்த பின்னர் “ஆம் அல்லது இல்லை’ என்ற பதிலை தங்களது ஸ்மார்ட் போன்
தொடுதிரை மூலமாக அளிப்பார்கள்.
துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி
பொதுக்கழிப்பிடங்களை நாளொன்றுக்கு இரண்டு முறை மேற்பார்வையிடும் நடைமுறை
தொடரப்படும்.
அலைபேசி வேண்டுதல்களின் விவரங்கள் மாநகராட்சிக் கணினிக்கு
அனுப்பப்படும். துப்புரவு மேற்பார்வையாளர்களின் குறிப்பின் அடிப்படையில்
பொதுக் கழிப்பிடங்களின் சுத்தம் மற்றும் பராமரிப்புத் தொடர்பான உடனடி
நிர்வாக நடவடிக்கைக்கு, உரிய அலுவலர்களுக்கு அவை அனுப்பப்படும் என்று மேயர்
செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.
துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத்
தலைவர்கள் ஜெயராம், ஆதிநாராணயன், குழுத் தலைவர்கள் அர்ச்சுனன்,
ராஜேந்திரன், சுகாதாரக் குழுத் தலைவர் தாமரைச்செல்வி, வரிவிதிப்புக் குழு
மற்றும் நிதிக்குழுத் தலைவர் ஆர்.பிரபாகரன் ஆகியோர் கூட்டத்தில்
பற்கேற்றனர்.