தினகரன் 05.01.2011
தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அதிரடியாக அகற்றம்
தூத்துக்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன.
தூத்துக்குடி,ஜன.5:
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பல்வேறு முக்கிய பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும் விபத்துகளுக்கு காரணமாகவும் இருப்பதால் இவற்றை வைத்தவர்களே முன்வந்து அகற்ற வேண்டும் எனவும் அதற்காக 24 மணிநேர அவகாசம் வழங்கப்படும் எனவும் கலெக்டர் மகேஷ்வரன் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள், கமிஷனர் குபேந்திரன் தலைமையில் டிஜிட்டல் பேனர்களை அகற்றும் பணி யில் ஈடுபட்டனர். இதில் 3ம் மைல் பகுதியில் துவங்கி, பாளைரோடு, விவிடி சிக்னல், பழைய பஸ்நிலையம், டபிள்யூஜிசி ரோடு, ஜி.சி ரோடு, சப்& கலெக்டர் அலுவலகம் வரை யில் 120க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்கள் ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டன.
இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், விழாக்கள், விளம்பரங்கள் என அனுமதி பெறாமல் மற்றும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டன.
மேலும் இதுவரையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் ஆக்கிரமித்தும், அனுமதி பெறாமலும் மாதக்கணக்கில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்காக முன்அனுமதி பெறவேண்டும் என காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் யாருமே மாநகராட்சியிலோ, காவல்துறையிடமோ முன்அனுமதி பெற்று பேனர் வைக்கவில்லை. விளம்பர பேனர் கள் அனைத்துமே முன்அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன என்பது தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்ந்தால் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது முறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.