தினத்தந்தி 15.06.2013
தூத்துக்குடியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர்
வினியோகம் செய்யப்படும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சசிகலாபுஷ்பா உறுதி

தூத்துக்குடியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம்
செய்யப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சசிகலா புஷ்பா உறுதி
அளித்துள்ளார்.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி கூட்ட அரங்கில்
நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கினார். துணை மேயர்
சேவியர், ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–
கோட்டுராஜா: மாநகராட்சி பகுதியில் 7 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே
தண்ணீர் வருகிறது. சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
மேயர் சசிகலாபுஷ்பா: அ.தி.மு.க. ஆட்சியில் இந்த அளவுக்காவது குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு உள்ளது.
குடிநீர்
ஆணையாளர் சோ.மதுமதி: தூத்துக்குடி மாநகராட்சிக்கு 21 ஆயிரம் லட்சம்
லிட்டர் தண்ணீர் வந்தது. தற்போது 15 ஆயிரம் லட்சம் லிட்டர் தண்ணீர் தான்
வருகிறது. பாபநாசம் அணை மூடப்பட்டதால் தண்ணீர் எடுப்பது பாதிக்கப்பட்டது.
அதே போன்று வல்லநாடு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும்
குடிநீர் பம்பிங் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால்
மாநகராட்சியில் உள்ள 8 நீர்த்தேக்க தொட்டிகளில் 6 நீர்த்தேக்க தொட்டி மூலம்
சீராக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 2 தொட்டிகளை சேர்ந்த பகுதிகளுக்கு 7
நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மேயர்: வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அகஸ்டின்: பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து எங்கள் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
கெட்டப்பெயர்
மேயர்: பாதாள சாக்கடை திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம்
செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி பணிகளை மாநகராட்சியே செய்தால்தான்
விரைவாக திட்டத்தை முடிக்க முடியும். குடிநீர் வடிகால் வாரியம் பணிகளை
மெதுவாக செய்வதால் மாநகராட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது. இதனால்
குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை
மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து திட்டத்தை முடிக்க
வேண்டும் என்று வருத்தத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.
கோட்டுராஜா: தூத்துக்குடி மாநகராட்சி வருமானம் குறைந்த மாநகராட்சியாக
உள்ளது. அம்மா உணவகத்துக்கு மாநகராட்சி நிதியில் இருந்து செலவு செய்வதால்,
ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும். ஆகையால் அரசு நிதி
ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மேயர்: எதிர்க்கட்சிக்காரர்களுக்கு தெரியும் போது, ஆளும்
முதல்–அமைச்சருக்கு தெரியாமல் இருக்குமா?. இது குறித்து அறிக்கை கேட்டு
உள்ளார்கள். அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இந்த நிலையில் வடக்கு மண்டல தலைவர் கோகிலா கூட்டத்தில் இருந்து வெளியே
வந்தார். அவரிடம் கேட்ட போது, எனது 3–வது வார்டு பகுதிக்கு எந்த பணிகளும்
செய்து கொடுக்கப்படவில்லை. அதனால் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்
என்று கூறினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் ரூ.75 லட்சம் செலவில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு
கட்டுவது, மாநகராட்சி பகுதிகளில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைத்து
செயல்படுகிறது. இதனை செயல்படுத்துவதற்கு மாநகர நல அலுவலர், உதவி ஆணையாளர்,
இளநிலை என்ஜினீயர், கணக்கு அலுவலர், வரித்தண்டலர், சுகாதார ஆய்வாளர்
அடங்கிய குழு அமைப்பது, ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்
கீழ் ரூ.44 கோடியே 66 லட்சம் செலவில் சாலைகள் அமைப்பது, தமிழ்நாடு
நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் சாலைகள்
அமைப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.