தினமலர் 08.06.2010 தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்கிறது
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஒரே நாளில் 15 வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த பணிகள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிக்காக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இரண்டாம் நாளாக நேற்று மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் உத்தரவின் பேரில் பொறியாளர் ராஜகோபாலன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.ஜெ.சி.பி உதவியுடன் மக்கள் எதிர்ப்பு இல்லாமல் சுறுசுறுப்பாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் 15 வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. முதல் நாளில் 30 ஆக்கிரமிப்புகளும், நேற்று 15 ஆக்கிரமிப்புகளும் சேர்த்து மொத்தம் 45 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன.மொத்தம் உள்ள 150 ஆக்கிரமிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அகற்றப்பட்டு விட்டன. அண்ணாநகர் 6வது தெருவரை உள்ள மீதமுள்ள நூறு ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து அகற்றப்படும் என்று மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் தெரிவித்தார்.