தினமணி 14.06.2010
தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயர் சூட்ட கோரிக்கை
தூத்துக்குடி, ஜூன் 13: தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயர் சூட்ட வேண்டும் என தூத்துக்குடி நகர காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி புதுகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.ஜே. ஜெபமணி ராஜன், செயலர்கள் சி. ராஜா, ஆர். அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலப் பேச்சாளர் என். அம்பிகாவதி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ. ரெனால்டு வில்லவராயர், பி. இஸ்தோர் மஸ்கர்னாஸ், தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜி. ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசுக்கு ஏற்படும் அவப்பெயரைத் தவிர்க்க தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகரில் அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்று பல மாதங்களான நிலையில், சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டு விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.
அருகில் உள்ள மாவட்டங்களில் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தது போன்று, தூத்துக்குடி மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி இனிகோ நகரில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல வீடுகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதே இடத்தில் மீண்டும் கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும்.
தூத்துக்குடியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட மாநகராட்சி கட்டடத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயரைச் சூட்ட வேண்டும். பணி நிறைவு பெற்று பல ஆண்டுகள் ஆகியும், செயல்படாமல் இருக்கும் மின் மயான கூடத்தை விரைவில் செயல்படச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.