தினமலர் 28.06.2010
தூத்துக்குடி மாநகராட்சி கட்டிடத்தில் தமிழ்வாழ்க‘ போர்டு
தூத்துக்குடி, துணை முதல்வர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாநகராட்சி புதிய, பழைய கட்டிடத்தில் ” தமிழ் வாழ்க‘ போர்டு வைக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் மேல் பகுதியில் தமிழ் வாழ்க என்கிற நியான் விளக்கு போர்டு வைக்க வேண்டும். இரவு நேரத்திலும் ஒளி வெள்ளத்தில் அந்த போர்டு தெரிய வேண்டும் என்று துணைமுதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த போர்டினை வைக்க நேற்று கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டது. உலகத் தமிழ் மாநாட்டில் துணைமுதல்வர் ஸ்டாலின் பிசியாக இருந்தாலும் அவர் போட்ட உத்தரவு குறித்த காலத்தில் நிறைவேற்றப்படுகிறதா என்பதை அவர் தீவிரமாக கண்காணிப்பார் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி புதிய பிரமாண்ட கட்டிடத்தின் மேல் பகுதியில் தமிழ் வாழ்க என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் மாநகராட்சி பழைய கட்டத்திலும் தமிழ் வாழ்க போர்டு வைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வரின் உத்தரவை உடனடியாக தூத்துக்குடி மாநகராட்சி நிறைவேற்றி விட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.