தினத்தந்தி 17.02.2014
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்கள் நாளை தொடங்குகிறது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிறப்பு தாய், சேய் நல மருத்துவ முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள
அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும்
சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்கள் நாளை (திங்கட்கிழமை), நாளை
மறுநாள்(செவ்வாய்க்கிழமை), 20–ந் தேதி நடக்கிறது.
முகாம்கள் குரூஸ்புரம் மகப்பேறு மையம்,
ஸ்டேட் வங்கி காலனி தருவைரோடு நகர் நல மையம், பழைய மாநகராட்சி அலுவலகத்தில்
உள்ள பாத்திமாநகர் நல மையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி
வரை நடக்கிறது.
ஸ்கேன் பரிசோதனை
இந்த முகாம்களில் கர்ப்பிணி பெண்களுக்கு
முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்குதல், ரத்தம் மற்றும் முழு
ஆய்வக பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான
சிறப்பு பரிசோதனை, அனைத்து தாய், சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவு
செய்தல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில்
பதிவு செய்தல், மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள்
மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு கவனம் தேவைப்படும் தாய்மார்களுக்கு
உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், தொற்றா நோய்கள்
கண்டுபிடிப்பு மற்றும் உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த முகாமை குரூஸ்புரம் மகப்பேறு
மையத்தில் மாநகராட்சி மேயர் பி.சேவியர் தொடங்கி வைக்கிறார். எனவே
பொதுமக்கள் அனைவரும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி
தெரிவித்து உள்ளார்.