தினமலர் 19.03.2010
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை வரவே வராது
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வரும் கோடையில் குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடும் கோடையிலும் தற்போது வழங்கப்படும் குடிநீர் குறையாமல் வழங்கப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொதுவாக ஏப்ரல்,மே மாதங்களில் கோடை வெயில் அதிகமாக இருக்கும்.
இந்த காலத்தில் குடிநீர் பிரச்னை பரவலாக ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் பல இடங்களில் அதற்கு முன்பாகவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குடிநீர் பிரச்னையை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தமட்டில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் 9 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு வல்லநாடு தலைமை நீரேற்றும் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை பொறுத்தமட்டில் தினமும் 230 முதல் 240 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்தால் மக்களுக்கு போதிய அளவிற்கு தண்ணீர் வழங்கி விடலாம். இதுவரை இந்த அளவிற்கு தான் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை நீரேற்றும் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அதிக அளவில் குடிநீர் லீக்கேஜ் ஆனது. இதனால் மாநகராட்சிக்கு வரும் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது. 190 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வந்ததால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த தண்ணீரை நான்கு நாட்களாக மாற்றும் சூழ்நிலை இரண்டு முறைகளில் ஏற்பட்டது. லீக்கேஜ் 9 இடங்களில் தலைமை நீரேற்றும் நிலைய பகுதியில் அடைக்கப்பட்டவுடன் மீண்டும் வழக்கம் போல் தண்ணீர் சப்ளை வந்து கொண்டிருக்கிறது. இதனால் எப்போதும் போல் குடிநீர் சப்ளை வழங்கும் பணி துவங்கி விட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.தற்போது சராசரியாக 220 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 225 லட்சம் லிட்டர் குடிநீர் வந்துள்ளது. தொடர்ந்து இன்னும் சில இடங்களில் லீக்கேஜ் சரிசெய்யும் பணிகளும் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வழக்கமாக கிடைக்கும் தண்ணீர் வந்துவிடும். இதனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் எப்போதும் போல் கிடைக்கும் அளவிற்கு கடும் கோடையிலும் ஏற்பாடு செய்யப்படும் என்று மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாமிரபரணி ஆற்றில் குடிநீர் கிணறுகள் மூலம் போதிய அளவிற்கு எப்போதும் போல் தண்ணீர் வருகிறது. ஆனால் சில நேரங்களில் தலைமை நீரேற்றும் நிலையத்தில் பத்து நிமிடம், 15 நிமிடம் என்று மின்சாரம் தடைபட்டு விடுவதால் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்படுகிறது.பம்பில் ஏர்லாக் ஆகிவிடுகிறது. மீண்டும் இவை சரியாவதற்கு அரைமணி நேரம் ஆகிவிடுகிறது. இதனால் தான் குடிநீர் சப்ளை பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பொதுவாக அரசு விதிமுறைகள் படி லீக்கேஜ் என்பது 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கலாம். அதனை தாண்டி லீக்கேஜ் இருந்தால் தான் பிரச்னை. தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தமட்டில் வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் வரும் போது அரசு விதிமுறையை விடவும் லீக்கேஜை குறைக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன..