தினமணி 18.06.2010
தெங்கம்புதூர் பேரூராட்சியில் மக்கள் குறைதீர் முகாம்
நாகர்கோவில், ஜூன் 17: தெங்கம்புதூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவில் 125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் வழங்கினார்.
தெங்கம்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா கேட்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அவரிடம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி 1087 மரக்கன்றுகளை அமைச்சர் வழங்கினார்.
அத்துடன் 107 பயனாளிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், தலா ரூ. 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 21.40 லட்சத்துக்கான காசோலையையும், 7 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவையும், 11 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகளையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு தெங்கம்புதூர் பேரூராட்சித் தலைவர் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார்.
மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் ஜி.எம். ஷா, சற்குரு கண்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.