தினமலர் 04.05.2010
தென்காசிக்கு சீரான குடிநீர் வினியோகம்:நகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்
தென்காசி:’தென்காசி நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும்‘ என நகராட்சி தி.மு.க.கவுன்சிலர் ராமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தென்காசி எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:’தென்காசி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறை தான் தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தென்காசிக்கு தாமிரபரணி குடிநீர் வழங்குவதற்காக ஊர்க்காடு, மன்னார்கோவில், திருமலையப்பபுரம், மாதாபுரம் பகுதிகளில் நீரேற்று நிலையங்கள் உள்ளது. இங்கிருந்து தென்காசி நீரேற்று நிலையத்திற்கு வந்தடையும் மெயின் குடிநீர் குழாய் உடைந்து வயல் பகுதிக்குள் தண்ணீர் விரையமாக செல்கிறது.இதனை சரி செய்து தென்காசி நகராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்‘ என கோரிக்கை மனுவில் கவுன்சிலர் ராமராஜ் கூறியுள்ளார்.