தினமணி 08.04.2010
தென்காசியில் மாட்டு இறைச்சி கடைகள் அடைப்பு
தென்காசி, ஏப். 7: மாடு அறுக்க அதிக கட்டணம் வசூலிப்பதைக் குறைக்க வலியுறுத்தி, தென்காசியில் புதன்கிழமை மாட்டு இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது.
தென்காசி நகராட்சியில் ஆடு, மாடு அறுக்க ஆடு அறுப்பு மனையில் வைத்து அறுப்பதற்கு ரூ.25 வீதம் வசூலிக்க வேண்டும் என நகராட்சியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஆடு, மாடு ஒன்றிற்கு ரூ.18 வீதமும், சென்னை பல்லாவரத்தில் ரூ.15 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தென்காசியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளதுபோல் ரூ.10 வீதம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி மாட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இக் கோரிக்கையை வலியுறுத்தி, தென்காசி நகராட்சி ஆணையர் செழியனிடம் மனு அளித்தனர். சங்கத் தலைவர் அப்துல் ரஹ்மான், செயலர் சாகுல் ஹமீது, முகம்மது காசிம், அப்துல் மஜீத், சேக் அப்துல் காதர் என்ற கட்டி காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.