தென்காசி நகராட்சியில் வீட்டு வரி குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த வேண்டும் துணைத் தலைவர் வலியுறுத்தல்
தென்காசி:தென்காசி நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட வீட்டு வரி குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் பானு தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுடலை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
நாகூர்மீரான்: நகராட்சி பகுதியில் இறைச்சிக்காக மாடு வெட்டுவதற்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டும் அதனை பலர் பயன்படுத்தாமல் ரோட்டின் ஓரத்தில் மாடுகளை வெட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ரகுமத்துல்லா, சலீம்: டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்திற்கு கவுன்சிலர்களுக்கு அழைப்பு இல்லை. நகராட்சி சுகாதார துறை மூலம் புதிதாக வாங்கப்பட்ட லாரிகள் துவக்க விழாவிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லையே!
தலைவர்: மக்கள் நலன் கருதி உடனடியாக லாரிகள் இயக்கப்பட்டது. இனி வரும் கூட்டம், நிகழ்ச்சிகளுக்கு முறையாக கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அதிகாரி: அபே மருந்து தெளிப்பது குறித்து நகராட்சி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம்தான் நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்றார்.
நாகூர்மீரான்: நகராட்சி வீட்டு வரி வசூல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இறப்பு சான்றிதழ் பதிவு செய்து கேட்பதற்கு 50 ரூபாய் கொடுத்தால் கவுன்டரில் பாக்கி 20 ரூபாய் கொடுப்பதில்லை. இது லஞ்சமா?
துணைத் தலைவர்: நகராட்சி பில் கலெக்டர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எவ்வித தவறும் செய்யவில்லை என சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அவரைத்தான் விஜிலென்ஸ் போலீசார் லஞ்சம் பெறும் போது கைது செய்தனர். உரிய முறையில் விசாரணை செய்யாமல் எப்படி பில் கலெக்டருக்கு நற்சான்றிதழ் அளிக்க முடிந்தது.
கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் வீட்டு வரி வசூல், பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு வசூலிக்கப்பட்ட பணம் குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஒரு சதுர அடிக்கு எவ்வளவு பணம் வசூல் செய்யப்படுகிறது என்பது குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். ஒவ்வொரு ரசீதிற்கும் 10 ஆயிரத்திற்கு குறையாமல் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தலைவர்: பில் கலெக்டரை மாற்ற வேண்டும் என எழுதி கொடுத்தேன். அதற்கு ஏப்ரல் மாதம் வரை யாரையும் மாற்ற முடியாது என கூறி விட்டனர். அதிகாரிகள் மெத்தனப் போக்கால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.
சலீம்: குடிநீர் இணைப்பு பெற டிபாசிட் தொகை செலுத்தி பல மாதங்கள் ஆகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
ரகுமத்துல்லா: நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாக பொய்யாக தலைவர் பத்திரிகையில் பேட்டி கொடுத்ததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். (இக்கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர்கள் சலீம், சாமி, மணிமாலா, மாரிச்செல்வி, வெங்கட்ராமன், செய்யது ஆபில் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.)
தலைவர்: காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவினை இந்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.