தினமணி 26.08.2010
தென்காசி, வள்ளியூரில் காலாவதி தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு
தென்காசி, ஆக. 25: தென்காசி பகுதியில் காலாவதி குடிநீர் பாக்கெட்டுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.தென்காசி நகர்மன்ற ஆணையர் செழியன் தலைமையில், உணவு ஆய்வாளர் ஹக்கீம், உணவு ஆய்வாளர் (பயிற்சி) மகராஜன், துப்புரவு அலுவலர் டெல்விஷ்ராய், ஆய்வாளர் சேகர், மேற்பார்வையாளர் காசிம், தங்கவேலு மற்றும் அதிகாரிகள் தென்காசி பகுதியிலுள்ள மதுக் கூடங்கள், கடைகளில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
தென்காசி காசிவிசுவநாதர் கோயில், சன்னதிபஜார் பகுதிகளில் உள்ள கடைகளிலும், காலாவதியான மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட நாள் குறிப்பிடாமல் விற்க வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 30 ஆயிரம்.வள்ளியூர் பகுதியில்…: வள்ளியூர் பகுதிகளில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை அழித்தனர்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரான்முகைதீன் உத்தரவின் பேரில் அவரது நேர்முக உதவியாளர் அருணாசலம் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மனோகரன், உணவு ஆய்வாளர் தம்பரதானு, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகர், ரகுபதி, மோரீஸ், பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வடக்கன்குளம், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் ஆகிய பகுதிகளில் கடைகளில் சோதனையில் மேற்கொண்டனர்.அப்போது, காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை கண்டுபிடித்து அவற்றை அழித்தனர்.