தினமலர் 29.06.2010
தென் மாவட்டத்தில் முதல் முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் நாய்கள் ஆபரேஷனுக்கு புதிய கட்டடம்
தூத்துக்குடி: தென் மாவட்டத்தில் முதல் முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் நாய்களை பிடித்து ஆபரேஷன் செய்ய நவீன வசதிகளுடன் கட்டடம் கட்டப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட நாய்களை ஒரே இடத்தில் அடைக்கும் வகையில் கூண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்படுவதால் தெருவில் இனி நாய்கள் அலையாமல் இருப்பதை தடுக்க முடியும். தமிழகத்தில் முக்கிய நகரங்களில் எல்லாம் நாய்கள் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. நாய்களை கொல்லக் கூடாது என்று சட்டம் உள்ளதால் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகமாக பண உதவியும் அளித்து வருகிறது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களால் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கு.க ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் உள்ள பாரத விலங்குகள் நலச்சங்கம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதற்கு உதவியது. இதன்படி தேனியில் உள்ள பவுண்டேசன் பார் அனிமல்கேர் அயின்ட் என்வராலமென்ட் டிரஸ்ட் என்னும் அமைப்பு மூலம் தூத்துக்குடியில் நாய்களுக்கு கு.க ஆபரேஷன் செய்யும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. முதலில் 124 நாய்களுக்கு கு.க ஆபரேஷன் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த பணிகளை செய்ய தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் தலைமையில் இன்ஜினினியர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி ஆகியோர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் பயனாக அடுத்த கட்டமாக கால்நடை டாக்டர் மணிகண்டன் தேனி டிரஸ்ட் தலைவர் ராதாகிருஷ்ணன் மூலம் 296 நாய்களுக்கு கு.க ஆபரேஷன் செய்யப்பட்டது. மொத்தம் இம் மாநகராட்சியில் 420 நாய்களுக்கு கு.க ஆபரேஷன் செய்து முடிக்கப்பட்டது.இந் நிலையில் சென்னையில் உள்ள பாரத விலங்குள் நலச் சங்க நிர்வாகிகள் சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது நாய்களுக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட இடத்தில் நவீன முறையில் ஆபரேஷன் தியேட்டர் வசதியுடன் புதிய கட்டடம் கட்டி நிரந்தரமாக இங்கு இந்த பணியினை எந்த நேரமும் செய்யும் அளவிற்கு ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தென் மாவட்டத்தில் முதல் முறையாக நாய்கள் ஆபரேஷனுக்கு செய்ய தனிக் கட்டடம் கட்டுவதற்கு தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் முயற்சி மேற்கொண்டார். இன்ஜினியர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி ஆகியோர் இது சம்பந்தமாக சென்னையில் உள்ள அமைப்பினர், ஆபரேஷன் செய்யக்குடிய டிரஸ்ட் போன்றவர்களை உடனடியாக அணுகி இதற்கான பணிகளை துரிதப்படுத்தினர்.இதனால் தென் மாவட்டத்தில் முதல் முறையாக நாய்கள் ஆபரேஷனுக்கு தனி கட்டடம் தூத்துக்குடியில் கட்டப்படுகிறது. தற்போது மாநகராட்சி நவீன ஆடடிக்கும் இடத்தின் அருகில் உள்ள பழைய கட்டடம் இருந்த இடத்தில் புதியதாக இதற்கான கட்டடம் கட்டப்படுகிறது. பல லட்ச ரூபாய் செலவில் இதற்கான கட்டடம் கட்டப்படுகிறது.புதியதாக கட்டப்படும் நாய்கள் ஆபரேஷன் செய்யும் கட்டடத்தில் “பிரி ஆபரேட்டில் கேர்‘ ஒரு அறையும், “போஸ்ட் ஆப்ரேட்டிவ் கேர்‘ ஒரு அறையும் அமைக்கப்படுகிறது. இது தவிர நவீன ஆபரேஷன் தியேட்டர் ஒன்றும், பிடித்து வரப்பட்ட நாய்களில் வெறிநாய் இருக்கிறதா என்பதை சோதனை செய்து அந்த நாய்களை தனியாக அடைப்பதற்குரிய “ஐசலோசன் செட்‘ ஒன்றும், சிறிய நாய்களை (பப்பி டாக்) அடைப்பதற்கு ஒரு அறையும் அமைக்கப்படுகிறது. இது தவிர கால்நடை டாக்டர் பரிசோதனை அறை, மருந்து அறை போன்றவையும் இடம் பெறுகிறது.பிராணிகள் வதைச்சட்டம் 1960 மற்றும் பிராணிகள் பிறப்பு கட்டுப்பாடு சட்டம் 2001ன் படி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கான கருத்தடை சட்டம் மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில்குமார் மிக ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. தென் மாவட்டத்தில் முதல் முறையாக தூத்துக்குடியில் நாய்கள் ஆபரேஷனுக்கு கட்டப்படும் புதிய கட்டடத்தை பார்த்து பிற மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இதனை கட்ட வேண்டும் என்கிற நிலையில் தூத்துக்குடியில் பிரத்யேகமான முறையில் இந்த கட்டடம் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால் தெருவில் திரியும் சுமார் 200 நாய்களை இங்கு அடைத்து விடலாம். கூண்டு, கூண்டாக இவை கட்டப்படுவதால் குறைந்தது பத்து கூண்டுகளாவது இங்கு இடம் பெறும் என்பதால் ஒரு கூண்டில் 20 நாய்களை வரை அடைக்கும் அளவிற்கு வசதி ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஊருக்கும் மொத்தமே இந்த அளவிற்கு தான் நாய்கள் அலையும் என்பதால் ஒரே நேரத்தில் அதனை பிடித்து அடைத்து விட்டு படிப்படியாக ஆபரேஷன் செய்யும் வாய்ப்பும் புதிய கட்டடம் மூலம் கிடைத்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.