தெருநாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு!
மஞ்சூர் பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்களை “ஐபான்’ தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.
மஞ்சூர் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. தெருக்களில் சுற்றித் திரியும் இவைகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்பகுதியில் காட்டுப் பன்றிகளின் தொல்லையும் அதிக அளவில் உள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் கொட்டப்படும் உணவுக் கழிவுகள், கோழிக் கடைகளில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் ஆகியவற்றை உண்ண வரும் காட்டுப் பன்றிகள், தெருநாய்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது.
உணவுக்காக குடியிருப்புப் பகுதிக்கு வரும் காட்டுப் பன்றிகளும், தெருநாய்களும் மோதிக் கொள்வதால் குழந்தைகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாக கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து தெருநாய்களை பிடித்து அவைகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. “ஐபான்’ அமைப்பைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர்கள், மஞ்சூர் பகுதியில் சுற்றித் திரிந்த 25-க்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.