தினகரன் 17.08.2010
தெருநாய் கருத்தடை அறுவைசிகிச்சை நகராட்சி நிதி வழங்குவதில் தாமதம்
திண்டுக்கல், ஆக.17: திண்டுக்கல் நகராட்சியில் உள்ள தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. தெருநாய்களை பிடித்து வருவது, பராமரித்து, ஆபரேஷன் செய்வது, தடுப்பூசி போட்டு, மீண்டும் அதே தெருக்களில் சென்று விட்டு வருதல் உள்ளிட்ட பணிகளை பிராணிகள் நல அமைப்பினர் செய்து வருகின்றனர்.
அறுவை சிகிச்சையை அரசு கால்நடை உதவி மருத்துவர் ஜெயராஜ் செய்து வருகிறார். தலைவர் பீர்முகமது, திட்ட ஒருங்கிணைப்பாளர் பனிமா, செயலாளர் ரமேஷ், உதவியாளர் ஷாஜகான் ஆகி யோர் அடங்கிய குழு இப்பணியைச் செய்து வருகிறது.
ஒருநாய்க்கு ரூ.445 வீதம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஆயிரத்து 368 தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டும் 968 நாய்களுக்கே இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது என்று பிராணிகள் நலச்சங்க அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதியை நகராட்சி மூலம் பெறுவதால் ஏற்படும் காலதாமதத்தை களைய இந்திய பிராணிகள் நலச்சங்கம் மூலம் பெற உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சொந்தநிதி மூலம் இதற்கானபணிகள் நடந்து வருகிறது என்றனர்.