தெரு நாய்களுக்கு கருத்தடை: ஆணையர் தகவல்
மதுரை மாநகரப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களில் 692 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. விலங்குகள் நலவாரிய விதிமுறைகளின்படி முறையாக பிடிக்கப்படும் இந்த தெரு நாய்கள், மாநகராட்சி நாய்கள் கருத்தடை மையத்தில் சிகிச்சை செய்து, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு, முறையாக உணவு மற்றும் மருந்துகள் கொடுத்து பராமரிக்கப்பட்டு, மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்படுகிறது.
மேலும், பொதுமக்களால் புகார் கூறப்படும் இடங்களில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.