தினமணி 08.08.2012
தெற்கு தில்லியில் நிரப்பப்படாத துணை, இணை இயக்குநர் பணியிடங்கள்: மாநகராட்சி கூட்டத்தில் விவாதம்
புது தில்லி, ஆக. 7: தெற்கு தில்லி மாநகராட்சியின் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் “ஏ’, “பி’ பிரிவுகளில் துணை, இணை இயக்குநர்கள் பணி இடங்கள் காலியாக இருப்பது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் பராஹத் சூரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆணையர், மாநகராட்சியின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து தகவல் தெரிவித்தார்.
மாநகராட்சி கல்வித் துறையில் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர் (பொது), துணை இயக்குநர் (பொது), துணை இயக்குநர் (நர்சரி) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
மாநகராட்சி சட்ட அலுவலர், இணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை), கூடுதல் இயக்குநர் (தோட்டக் கலைத்துறை), இயக்குநர் (செய்தி மக்கள் தொடர்பு), துணை இயக்குநர் (செய்தி மக்கள் தொடர்பு) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார்.மாநகராட்சி மக்கள் தகவல் தொடர்பு அதிகாரியாக முகேஷ் யாதவ் நியமிக்கப்பட்டது குறித்து பேசிய பராஹத் சூரி, “தகவல் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்படுபவர் இதழியல் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
மக்கள் தொடர்புப் பணியில் நாளேடு, செய்தி ஏஜென்சி, அரசுத் துறை செய்திப் பிரிவில் பத்து ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும்.தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் முகேஷ் யாதவ் இந்த பணிக்குத் தகுதியானவர் இல்லை’ என்று புகார் கூறினார்.
தில்லி மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அந்த இடங்களில் தாற்காலிக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.