தினமலர் 12.08.2012
தேசப்பற்றை வளர்க்கும் நிகழ்ச்சி மாநகராட்சி பள்ளி முதலிடம்
திருப்பூர் : பள்ளி மாணவ, மாணவியர் இடையே தேசப்பற்றை வளர்க்கும் கலை நிகழ்ச்சி, திருப்பூரில் நடந்தது; அரண்மனைப்புதூர் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றது.
திருப்பூர் தெற்கு இன்னர்வீல் சங்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் இடையே தேசப்பற்றை வளர்க்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சங்க தலைவி நித்யா தலைமை வகித்தார். “நாட்டை நல்வழிப்படுத்துவதில் உன்னுடைய செயல்பாடு என்ன’ என்ற தலைப்பில் பாட்டு, பேச்சு மற்றும் நடனப் போட்டிகள் நடந்தன. அரண்மனைப்புதூர், காதர்பேட்டை, தேவாங்கபுரம், கருவம்பாளையம் ஆகிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.திட்ட ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி ஆகியோர் நடத்தினர். அரசு பள்ளி மாணவ, மாணவியர் இடையே உள்ள திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களை ஊக்கப்படுத்துவதே, இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
அதிக புள்ளிகளை எடுத்த அரண்மனைப்புதூர் மாநகராட்சி பள்ளி முதலிடம் பெற்றது. தேவாங்க
புரம் பள்ளி இரண்டாமிடம், காதர்பேட்டை பள்ளி மூன்றாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரோட்டரி தலைவர் தேவராஜ் பரிசு வழங்கினார். சங்க செயலாளர் பிரபா நன்றி கூறினார்.