தினமணி 23.02.2010
தேயிலை கடைகளில் திடீர் சோதனை: சுகாதாரத்துறை நடவடிக்கை
திருநெல்வேலி, பிப். 22: திருநெல்வேலியில் திங்கள்கிழமை தேயிலை விற்பனை செய்யும் கடைகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ, இணை இயக்குநர் கண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தேயிலை கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை திருநெல்வேலி மாநகர் பகுதியிலும் நடைபெற்றது. இதை மாநகராட்சி உணவு ஆய்வாளர்கள் அ.ரா. சங்கரலிங்கம், பி. காளிமுத்து, சுகாதார ஆய்வாளர் அரசகுமார் ஆகியோர் நடத்தினர்.
சந்திப்பு, நகரம் பகுதிகளில் உள்ள தேயிலை மொத்த விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதி, புட்டாரத்தியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் உள்ள இரு கடைகளில் கலப்பட தேயிலை இருப்பதாக சந்தேகித்த அதிகாரிகள், அவற்றை எடுத்து உணவு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அத் தேயிலை பகுப்பாய்வில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.