தேவகோட்டையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பை, கப்புகளை பறிமுதல் செய்தனர்.
நகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சரவணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நகரில் ராமநகரிலிருந்து பேருந்துநிலையம் வரை இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.
நகரின் சுகாதாரம் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். தினமும் காலையில் நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துப்புரவு பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் நகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவருக்கு புகார் சென்றது. இதைதொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இனிமேல் தடைசெய்யப்பட்ட இத்தகைய பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.