தினமணி 23.03.2013
தினமணி 23.03.2013
தேவகோட்டை நகராட்சி புதிய கட்டிடத்திற்கு சோமசுந்தரம்மாளிகை பெயர் சூட்ட முடிவு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில்
புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்திற்கு அந்த இடத்தை தானமாக வழங்கிய
பி.எஸ்.எஸ் சோமசுந்தரம் மாளிகை என பெயர் சூட்ட தமிழக அரசுக்கு
பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காக நடைபெற்ற அவசர கூட்டம் வியாழக்கிழமை தலைவி சுமித்ராரவிக்குமார்
தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுந்தரலிங்கம், ஆணையர் சரவணன்,
பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தீர்மானத்தின் மீது
பேசிய தி.மு.க உறுப்பினர் கேசவன் ஏற்கெனவே இது குறித்து தீர்மானம் முந்தைய
நகர்மன்ற தலைவர் வேலுச்சாமி மூலமாக நிறைவேற்றப்பட்டு அரசுகக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. அதுமுதல் இங்கு சோமசுந்தரம் மாளிகை என பெயர்பலகை
வைக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டிடத்தில் அந்த பெயர் இல்லாமல் நகராட்சி
அலுவலகம், தேவகோட்டை என பொறிக்கப்பட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய ஆணையாளர் சரவணன் அரசு விதிப்படி தனியார் ஒருவர் பெயரை
வைக்க ஒப்புதல் தெரிவித்து ஆணையிட்டபிறகுதான் பெயரை எழுத முடியும். தற்போது
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என
தெரிவித்தார்.
பிறகு அ.தி.மு.க உறுப்பினர் முத்தழகு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே
இருந்த நல்ல தண்ணீர் கிணறு காணாமல் போய்விட்டது. அதை கண்டுபிடித்து தர
வேண்டும். நான் பல வருடங்களாக இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகிறேன்.
இதற்கு பதில கூறிய நகராட்சி பொறியாளர் செல்வராஜ் அந்த கிணறு குறித்து
ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். விரைவில் நடவடிக்கை
எடுக்கப்படும். பின்னர் கூட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.