தினமணி 09.03.2010
தொலைபேசி நிறுவனங்களுக்கு கோவை மாநகராட்சி எச்சரிக்கை
கோவை, மார்ச் 8: கோவை நகர வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தராத தொலைபேசி நிறுவனங்களுக்கு புதிய கேபிள் பதிக்க அனுமதி வழங்கப்படாது என்று, கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
÷உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி சாலைப்பணிகள், சாலையோரப் பூங்காக்கள், நடைபாதைகள் போன்ற வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி 27.11.2009, 30.12.2009 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தொலைபேசி நிறுவனங்களுடனான கூட்டங்களில் இரு மாதங்களுக்குள் தங்களது கேபிள்களை புதைத்தல், அகற்றுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
÷ஆனால், பல இடங்களில் இவற்றை தொலைபேசி நிறுவனங்கள் செய்யவில்லை. இதனால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இனியும் கேபிள்களை அகற்றாத தொலைபேசி நிறுவனங்களின் கேபிள்கள் துண்டிக்கப்படும். புதிதாக அமைக்கப்படும் சாலைகளில் இந்த நிறுவனங்களின் கேபிள்கள் பதிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனவே, தொலைபேசி தகவல்தொடர்பு நிறுவனங்களின் கேபிள்கள் மற்றும் தொலைக்காட்சி கேபிள்கள் பூமிக்கு அடியில் புதைத்தல், அகற்றுதல் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று, தெரிவித்துள்ளார்.