தினமலர் 30.04.2010
தொழு நோய் கண்காணிப்பு பணி: சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவு
பொள்ளாச்சி:தொழுநோயின் அறிகுறிகளை தெரிந்து கொண்டு, தொடர் சிகிச்சைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொழுநோய் ‘மைக்கோபாக்டீரியம் லெப்ரே‘ என்னும் குச்சிவடிவமுள்ள கண்ணுக்கு தெரியாத கிருமியால் உண்டாகிறது. தொழுநோய் கிருமி தாக்கினால் அதன் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளாகிறது. சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நோயாளி தும்மும்போதும், இரும்மல் போன்ற நிகழ்வுகளின் போது வெளிப்படும் கிருமிகள் காற்றின் மூலம் பரவி தொழுநோயை உண்டாக்குகிறது. உடலில் தடுப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதாக தாக்குவதுடன், நோயின் வீரியம் அதிகரிக்கிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் தொழுநோய் மருத்துவ முகாம் நடக்கிறது.
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு, தொழுநோய் ஒழிப்பு திட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் : குடியிருப்பு பகுதிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வீடுவீடாக செல்ல வேண்டும். தொழுநோய் அறிகுறிகள் உள்ளதா என்பதை வீட்டில் உள்ளவர்களிடம் விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை காண்பிக்க வேண்டும்.தொழுநோயின் அறிகுறிகள் தெரிந்தால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்து, தொழுநோய் சந்தேக நபர்கள் பதிவு செய்ய வேண்டும்.
வார சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற வராமல் இருந்தால் அவர்களை மறுபடியும் சந்தித்து அறிவுரை வழங்க வேண்டும். சிகிச்சை பெறும் நோயாளிகளின் வீட்டிற்கு 28 நாட்களுக்கு ஒருமுறை சென்று மாத்திரை அட்டை கொடுக்க வேண்டும்.மாத்திரைகளால் பின்விளைவு ஏற்பட்டாலோ, நோயின் தொந்தரவுகள் அதிகரித்தாலோ அவர்களை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும். சிகிச்சை பெறுவதை பாதியில் நிறுத்தி விட்டால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை செய்ய வேண்டும். தொழுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் நடத்த வேண்டும்.இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.