தினகரன் 23.07.2010
நகரப்பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் வரை புதிய சாலைகள் போடக்கூடாது
புதுச்சேரி, ஜூலை 23: புதுவை நகரப்பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் திட்டம் உள்ளதால் புதிய சாலைகள் போடக்கூடாது என்று மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுவை நல்லாட்சிக்கான கூட்டமைப்பு சார்பில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் அளித்த பேட்டி:
சீரான மட்டமாக்கும் திட்டம் என்பது சாலை சந்திப்புகளில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் போது அனைத்து மட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உயரமான பகுதிகளில் இருந்து தாழ்வான பகுதிகளுக்கு கழிவு நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டால் தான் கழிவுநீர் இயற்கையாக வெளியேறவும், அது அதற்குண்டான வெளியேறும் பகுதியாகவும் அமையும். இந்த சீரான மட்டமாக்கும் திட்டம் மூலம் இறுதி செய்யப்பட்ட சாலைகளின் மட்டத்தை ஒரு போதும் மாற்றக் கூடாது.
புதுச்சேரி நகர அமைப்பு குழு வீடு கட்ட அனுமதி அளிக்கும் போது வீட்டின் அடித்தள அளவை வரையறை செய்து குறிப்பாக அது எந்த வகையிலும் சாலையின் மட்டத்துக்கு கீழ் இல்லாத வகையில் பார்த்து அனுமதி அளிக்க வேண்டும். புதுவையில் இது குறித்து எந்தவித முழுமையான அறிவியல் பூர்வமான திட்டம் எதுவும் இல்லாமல் சாலை மட்டத்தை தீர்மானிக்கும் நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சாலைகளின் மட்டத்தை விட வீடுகளின் மட்டம் கீழானதால் சிறிய மழை பெய்தாலும் வீடுகள் மழை வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தற்போது பாரம்பரியம் மிக்க புதுச்சேரி நகரம் சாலை, கழிவுநீர் வாய்க்காலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுவை முத்துமாரியம்மன் கோயில் வீதியில் ஏற்கனவே உள்ள சாலையை விட ஒரு அடி உயரம் சாலை அமைப்பதால் கோயிலிருந்து வெளிவரும் கழிவுநீர் வெளியேற வழியில்லை. கோயில் உள்மட்டத்தை உயர்த்தினால் கருவறை பாதிக்கப்படும் நிலை உள்ளது. உள்ளாட்சி துறை செயலர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், தற்போது நடந்து வரும் சாலை அமைக்கும் பணி களை ஆய்வு செய்து அதன்பின்னர் வேலையை தொடர வும் நகர தலைமை வடிவமைப்பு அதிகாரிக்கு அறிவுறுத்தினார். ஆனால் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது நகரம் முழுவ தும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க திட்டம் போடப்பட்டுள் ளது. அதுவரையில் புதியதாக எந்த சாலையையும் போடாமல் இருப்பது தான் சரியானது. இது குறித்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் உரிய கவனம் செலுத்தி எம்எல்ஏக்களின் நிதியில் போடப்படும் சாலைகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் சாலைகள் வடிவமைக்கப்பட்டு போட உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு கூறி உள்ளார்.
பேட்டியின் போது அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன், நல்லாட்சிகள் கூட்டமைப்பு இணை செயலாளர் தேவ நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.