தினமலர் 07.08.2012
நகரமைப்பு சட்ட திருத்தம் மூலம் சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம்? : அதிகாரிகள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
டில்லி, மும்பை போன்று தனி நிர்வாக அமைப்பை ஏற்படுத்தாமல், நகரமைப்பு சட்டத் திருத்தம் மூலமே, சி.எம்.டி.ஏ., எல்லைகளை விரிவாக்கம் செய்வது குறித்து, உயர் அதிகாரிகள் நிலையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் பிற பெரு நகரங்களை விட, சென்னை பெருநகர பகுதியின் பரப்பளவு மிகவும் குறைவு. சென்னை பெருநகர எல்லைக்கு வெளியே வளர்ந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், மறைமலை நகர், கேளம்பாக்கம், திருவள்ளூர் உள்ளிட்ட சிறு நகரங்களும், இவற்றின் சுற்றுப்புற பகுதிகளிலும் தாறுமாறான வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
விரிவாக்கம் : இதை நெறிப்படுத்த இப்பகுதிகளை, சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் கொண்டு வருவது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும் என, அரசுக்கு பரிந்துரைகள் வந்தன. இதை கருத்தில் கொண்டு, டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் உள்ளது போன்று, சென்னையிலும் பெருநகர் பகுதி எல்லையை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது.
2 பரிந்துரைகள் : சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகளை கொண்டு, இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு இரண்டு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசுக்கு சில மாதங்கள் முன் அளித்தது.
இதன்படி, தற்போது, 1,189 சதுர கி.மீ.,ஆக உள்ள பரப்பளவை, இரண்டு வகையில் அதிகரிப்பது பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு பரிந்துரையில், 4,459 சதுர கி.மீ.,ஆக அதிகரிக்கலாம் என்றும், மற்றொன்றில், 8,878 சதுர கி.மீ.,ஆக விரிவாக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. இதன் செயலாக்கத்துக்காக, ஏற்கனவே, விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட, டில்லி, மும்பை அதிகாரிகளையும், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி, வருவாய்த் துறை அதிகாரிகளையும் அழைத்து கலந்தாலோசிக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்கான கூட்டம், வரும் 9ம் தேதி நடைபெறும் என தெரிகிறது.
அதிகாரிகள் ஆலோசனை : இதனிடையே, சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் குறித்து விவாதிக்க, உயர் அதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அளித்த பரிந்துரைகள் குறித்து, இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இவ்விரு பரிந்துரைகளை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான இரு வழிமுறைகள் அப்போது முன்வைக்கப்பட்டன. இதன்படி, டில்லி, மும்பை நகரங்களில் பெருநகர் பகுதி எல்லைகளை விரிவாக்கம் செய்த போது, அதன் நிர்வாகத்துக்காக, சி.எம்.டி.ஏ., போன்று அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களுடன் மேலும் ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உதாரணமாக, டில்லியில் ஏற்கனவே டில்லி பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்பட்டு வந்த நிலையில், அதன் விரிவாக்கத்தின் போது, தேசிய தலைநகர் வளர்ச்சி மண்டலம் (என்.சி.ஆர்.,) என, தனியாக ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
சட்டத்திருத்தம் மூலம்… : சென்னையிலும், சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் செய்யும் போது, சென்னை பெருநகர் வளர்ச்சி மண்டலம் என, மேலும் ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இவ்வாறு ஏற்படுத்துவதற்கு தனியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். அத்துடன், ஏற்கனவே, உள்ளாட்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகியவற்றுடன் இன்னொரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவதால், நிர்வாகச் செலவு தான் ஏற்படுமே தவிர தனியாக எவ்வித பயனும் இருக்காது. எனவே, இப்போதுள்ள சி.எம்.டி.ஏ., நிர்வாக எல்லையை மட்டும் நகரமைப்பு சட்டத்திருத்தம் மூலம் விரிவாக்கம் செய்யலாம். இப்போது, சி.எம்.டி.ஏ.,வுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கலாம். மேலும், அந்தந்த பகுதிகளில் வளர்ச்சியையும் நெறிப்படுத்தலாம். இதனால், தேவையற்ற நிர்வாகச் செலவும், கால விரயமும் தவிர்க்கப்படும். இது குறித்து, அரசுக்கு தெரிவித்து, அடுத்த நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.