தினமலர் 21.01.2010
நகராட்சிகளின் நிதி ஆதாரம் : அதிகாரிகளுக்கு அறிவுரை
கோவை : “நிதி ஆதாரத்தை பெருக்க நகராட்சிகள் முயற்சிக்க வேண்டும்‘ என, அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சிகளை மேம்படுத்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கான இரு நாள் பயிலரங்கு, கோவையில் நேற்று துவங்கியது.ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ஓட்டலில் பயிலரங்கை துவக்கி வைத்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பேசுகையில், “”நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டமிடலுக்கு பயிற்சிகள் அவசியம். இதன் மூலம் நகராட்சிகள் பயன்பெறும்,” என்றார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற திட்ட அலுவலர் ராமானுஜம் பேசியதாவது: நகரை மேம்படுத்தும் கடமை நகராட்சிகளை சார்ந்தது. நகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட்டால் மட்டுமே மக்கள் செழிப்பாக இருக்க முடியும். அதற்கு நகர மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வது அவசியம். அடுத்து வரும் 20 ஆண்டுக்கு மக்கள் தொகை எந்த அளவு உயரும் என்று திட்டமிட வேண்டும்; அதற்கேற்ப தண்ணீர் இருப்பு தேவை, திடக்கழிவு வெளியேறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள புதிய திட்டம் தயாரிக்க வேண்டும். அதற்கேற்ப, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் பண்ணைகளை அமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு, நகராட்சி நிர்வாகங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். வணிக வளாகம் கட்டுதல், கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவிர ரோடு, தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, ராமானுஜம் பேசினார்.
நகராட்சிகள் நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் சண்முகம் பேசுகையில், “”நகராட்சி நிர்வாகத்தின் நிதி எப்போதும் குறையாமல், அதிகரித்து வருவதற்கான வழிவகைகளை மேற்கொள்வது அவசியம். இருப்பிலுள்ள நிதியில் ஒரு பகுதியை முதலீட்டில் வைப்பதும், மற்ற நிதியை பயன்படுத்துவதற்கென்று புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்,” என்றார்.
நகராட்சிகளுக்கான நிதி வல்லுனர் சுவாமிநாதன் பேசுகையில், “”நகராட்சிகளிலுள்ள வசதிகளுக்கு ஏற்ப வரி நிர்ணயம் செய்யப்படவேண்டும். எக்காரணத்தைகொண்டும் வரிவசூலில் நிலுவை வைக்க கூடாது. இதை சரியான முறையில் வைத்துக்கொண்டால் நிதி மேலாண்மை நல்ல நிலையில் இருக்கும்,” என்றார்.
இப்பயிலரங்கில், குறிச்சி, குனியமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை, சத்தியமங்கலம், கோபி, கவுண்டம்பாளையம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்; தொடர்ந்து இன்றும் நடக்கிறது.