தினமணி 29.10.2013
நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும் தீர்மானம் ஒத்திவைப்பு
தினமணி 29.10.2013
நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும் தீர்மானம் ஒத்திவைப்பு
தாராபுரம் நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும்
தீர்மானம் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக நகர்மன்றத் தலைவர்
ஞா. கலாவதி திங்கள்கிழமை அறிவித்தார்.
தாராபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஞா. கலாவதி தலைமையில் காலை
10.30 மணிக்கு நடைபெற்றது. ஆணையாளர் க. சரவணக்குமார், பொறியாளர் முருகேசன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு, அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
கூட்டம் துவங்கியதும் பேசிய நகர்மன்றத் தலைவர் போதிய உறுப்பினர்கள்
இல்லாததால் கூட்டத்தை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக
அறிவித்ததை தொடர்ந்து கூட்டம் நிறைவுற்றது.
இரண்டாவது கூட்டம்:
முதற் கூட்டம் நிறைவுற்றபின் 10 நிமிடத்தில் மீண்டும் கூட்டம் நடைபெற
உள்ளதாக பத்திரிக்கையாளர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சார்பில் தகவல்
அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 10.45க்கு இரண்டாவது கூட்டம் துவங்கியது.
நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ். கோவிந்தராஜ் உள்பட அனைத்து உறுப்பினர்களும்
பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர், தாராபுரம் நகர மக்களின் நீண்டநாள்
கோரிக்கையான அமராவதி ஆற்றின் நடுவே தடுப்பணை கட்ட தமிழக அரசு 6.73 கோடி
ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதற்காக தமிழக முதல்வருக்கும், பொதுப்பணித்துறை
அமைச்சருக்கும் நகர்மன்றம் சார்பில் நன்றி தெரிவித்தார்.
மேலும், மொத்தமுள்ள 46 தீர்மானங்களில் நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும்
தீர்மானம் மட்டும் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாகவும், பிற
தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.