நகராட்சிப் பகுதியில் மாடுகளை திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம்
பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வி. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்கள், வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்கள், பஸ் நிலையம், மார்க்கெட், கடைவீதி மற்றும் முக்கிய வீதிகளில் மாடுகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது. இது சம்பந்தமாக, பொதுமக்கள், நுகர்வோர்கள் மற்றும் காவல்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏராளமான புகார்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, மாடுகளின் உரிமையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான மாடுகளை தங்களது பராமரிப்பில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
தவறும்பட்சத்தில், நகராட்சி பணியாளர்களைக் கொண்டு மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்துவதுடன், உரிய அபராதத் தொகையும் வசூலிக்கப்படும்.
மேலும், சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.