தினமணி 30.07.2010
நகராட்சிப் பள்ளி மாணவிக்குப் பரிசு
மயிலாடுதுறை, ஜூலை 29: தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். தையல்நாயகிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் உயர் கல்வி படிப்பிற்க்கான செலவையும் உள்ளாட்சி நிர்வாகமே ஏற்கும் என்ற சான்றிதழையும் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் நகர்மன்றத் தலைவர் ஜெ.லிங்கராஜன், பள்ளித் தலைமையாசிரியர் த. முருகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.