நகராட்சியாகிறது செம்பாக்கம் பேரூராட்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பாக்கம் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை, உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசுகையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை தாம்பரத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பாக்கம் பேரூராட்சி வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதியாகும். பல அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள இப்பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று வருகிறது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செம்பாக்கம் பேரூராட்சியில் 47 ஆயிரத்து 771 பேர் வசிக்கின்றனர். பேரூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.5 கோடியாக உள்ளது. எனவே, செம்பாக்கம் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். அமைச்சர் முனுசாமி.