தினமலர் 06.05.2010
நகராட்சியால் பயன்பெறுவோர் தவறாமல் வீட்டு வரியை செலுத்த முன் வரவேண்டும்
திண்டிவனம் : பயனாளிகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை தவறாமல் செலுத்த வேண்டும் என திண்டிவனம் சேர்மன் பூபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டிவனம் நகராட்சியின் பொன்விழா நகர்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நகராட்சி அலுவலக வளாகத் தில் நடந்தது. விழாவிற்கு நகராட்சி ஆணையர் முருகேசன் தலைமை தாங்கினார். துப்புரவு அலுவலர் பாலசந்திரன் வரவேற்றார்.
நகராட்சி சேர்மன் பூபாலன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியை வழங்கினார். தொடர்ந்து நகராட்சியின் மூலம் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான 6 மாத கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சியை துவக்கி வைத்து சேர்மன் பூபாலன் பேசியதாவது:
நகராட்சியின் மூலம் செயல் படுத்தப்படும் அரசு திட்டங்களை பயனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சுழல்நிதி பெறும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் கொடுத்த வங்கிகளில் முறையாக திரும்ப செலுத்த வேண்டும்.
நகராட்சி உங்களுக்கு வேண்டிய திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது. நாம் நகராட்சிக்கு செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். இங்கு சுழல்நிதி பெறும் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி, மொபைல் போன் பழுது பார்க்கும் பயிற்சி பெறும் பயனா ளிகளாகிய நீங்கள் அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை தவறாமல் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு சேர்மன் பூபாலன் பேசினார்.
சுய உதவிக்குழுக்கள் செயல்படும் விதம் குறித்து நகராட்சி நிர்வாக மண்டல திட்ட இயக்குனரகத்தின் திட்ட இயக்குனர் செல்வராஜ் விளக்கிப் பேசினார். திண்டிவனம் சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபாகர், ஸ்டூண்ட் சாப்ட்வேர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் மேலாளர் செந்தில்குமார், மரக் காணம் சாலை டி.சி.எஸ்.டி. நிறுவனத்தைச் சேர்ந்த அப்துல்அமீத் ஆகியோர் பயிற்சி விளக்கவுரை யாற்றினர். நகராட்சி மேலாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் கவுன்சிலர்கள் முரளி, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சியின் சமுதாய அமைப்பாளர் ஜெயஸ்ரீபிரபா நன்றி கூறினார்.